சென்னைக்கு 2–ந்தேதி ஜனாதிபதி வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற 2-ந் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் முழு உருவப்படம் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
இந்த விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச்செயலாளர் வெ.இறைன்பு உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகள் தலைமை செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags :