எந்த ஒரு வன்முறையும் அரசு ஏற்றுகொள்ளாது-வன்மையாக கண்டிக்கத்தக்கது உதயநிதி ஸ்டாலின்
தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒரு பகுதியாக தேனி ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,பங்கேற்றார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்லிவிட்டார். இவர்கள்தான் மகளிர் உரிமை திட்டத்தை ஆரம்பித்தார்களா? காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தொடங்கினார்களா? அரசியல் காரணங்களுக்காகவே எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசுகிறார்” என்று தெரிவித்தார்.
ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர், தேசிய கொடியை தூக்கி போட்டதற்கு திமுகவினரிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லையே என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பிசிசிஐ-யிடம் கேட்க வேண்டியதுதானே. அமித்ஷாவின் மகன் தானே நடத்துகிறார். அவர்களிடம் கேட்கட்டும்” என்று கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,, எந்த ஒரு வன்முறையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார். மேலும் முல்லைப் பெரியாறு பிரச்னையில் அரசு தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும், நீட் விலக்கு கொள்கைக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, எல்லோருமே ஒத்துழைக்க வேண்டும் என்றும், நீட் விலக்கு சாத்தியமானால் அதை அதிமுகவே உரிமை கொண்டாடிக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.
Tags : எந்த ஒரு வன்முறையும் அரசு ஏற்றுகொள்ளாது-வன்மையாக கண்டிக்கத்தக்கது உதயநிதி ஸ்டாலின்