மருந்து கடையில் ரூ.2 லட்சம் திருடிய கேரள வியாபாரி கைது
கூட்டாளி யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் தனி ஆளாகவே மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார் கேரள வியாபாரி.
பெரியகுளம் மூன்றாந்தல் அவுட்போஸ்ட் அருகே மோகன் என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இவரது கடையில் கடந்த 25-ந் தேதி நள்ளிரவில் 4 பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர் ரூ.2 லட்சம் மற்றும் மருந்து பொருட்களை திருடிச் சென்றனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களும் திசை திருப்பப்பட்டு இருந்தது. இது குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார் உத்தரவின் பேரில் தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சாலையோரம் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதனையடுத்து திருவனந்தபுரம் அட்டங்குளக்கராவினைச் சேர்ந்த சாகுல் அமீது (55) என்பவரை கைது செய்தனர்.
இவர் தேனி மற்றும் திண்டுக்கல்லில் நிரந்தரமாக லாட்ஜில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். துணி வியாபாரி போல பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனியாக இருக்கும் கடைகளை நோட்டமிட்டு இரவில் வந்து கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
கூட்டாளி யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் தனி ஆளாகவே மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் கொள்ளையடித்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து மருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை நடந்த 3 நாட்களுக்குள் போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags :