இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள்

by Editor / 24-01-2023 09:43:32am
இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள்


சென்னை அண்ணா நகர், பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்
சஞ்சய் குப்தா(40). இவரது மனைவி வினிதா குப்தா(38), தொழிலதிபர்களான இவர்கள் அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.53 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். கடன் வாங்கிய தொகைக்கான தவனை திருப்பி செலுத்தாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி அதிகாரிகள் வீட்டை சீல் வைத்து விட்டு சென்றனர்.

நேற்றைய தினம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்காக வங்கி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட வீட்டின் கதவை திறந்து வீட்டிற்குள் சோதனை செய்தபோது வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அண்ணா நகர் போலீசார் வீட்டில் இருந்த இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உரிய லைசன்ஸ் உடன் வைத்துள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் நாச வேலைக்காக வாங்கி வைத்து இருந்தார்களா? துப்பாக்கியை வீட்டில் எதற்காக வைத்திருந்தார்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தம்பதிகள் இருவரும் எங்கு உள்ளார்கள் என்று அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவரிடமும் விசாரித்த பிறகு துப்பாக்கி எங்கிருந்து வாங்கினார்கள். எதற்காக வைத்திருந்தார்கள் என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனின் தவணையை முறையாக செலுத்தாத தொழிலதிபர் வீட்டில் வங்கி அதிகாரிகள் இரண்டு கை துப்பாக்கிகள், தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via