மதுரை மாநகராட்சியில் பல கோடி முறைகேடு வழக்கில்  5 தற்காலிக பணியாளர்கள் கைது.

by Staff / 27-06-2025 08:30:45am
மதுரை மாநகராட்சியில் பல கோடி முறைகேடு வழக்கில்  5 தற்காலிக பணியாளர்கள் கைது.

மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்கள் உள்ளன. இவற்றிற்கான வரிவிதிப்பு, வரி வசூல் பணிகள் ஆன்லைனில் நடக்கிறது. புதிய கட்டடங்களுக்கும் மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப வரி விதிப்பு நிர்ணயிக்கப்படும்.வரிவிதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் நீதிமன்றம் உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்டம் தீர்மானம் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரிவிதிப்பு குறைந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024ல் கமிஷனராக இருந்த தினேஷ்குமார் இந்த முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். ஆனாலும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கூட்டணியில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்தது.

வரிவிதிப்பு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் 'பாஸ் வேர்டுகள்' திருட்டு தனமாக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் 3, 2, 4 மண்டலங்களில் அதிகம் நடந்துள்ளது தெரியவந்தது.

இது சம்பந்தமாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ் குமார் இட மாற்றம் செய்யப்பதன் காரணமாக வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. 

இந்த நிலையில்  மாநகர ஆணையாளராக சித்ரா பொறுப்பேற்றதும் விசாரணையை முடுக்கி விட உத்தரவிட்டதின் பேரில் சைபர் கிரைம், குற்றப்பிரிவு விசாரணை தீவிர படுத்தினர் கடந்த இரண்டு நாட்கள் நடந்த விசாரணையில் முதல் நாளில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களான தனசேகரன், (மண்டல 3 தலைவரின் நேர்முக உதவியாளராக இருந்தார்), சதீஷ் (கம்ப்யூட்டர் ஆபரேட்டர்) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

நேற்று நடந்த விசாரணையில் உதவி கமிஷனரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன் ,ராஜேஷ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சைபர் கிரைம் போலீசாரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், 'மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு குழு தலைவர், கவுன்சிலர்கள் வற்புறுத்தியதால் தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக' தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து  மூன்று மண்டலத் தலைவர்களிடமும், வரிவிதிப்பு குழுவை சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடந்தது அவர்கள் 'இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை' என தெரிவித்துள்ளனர். 

இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தற்காலி ஒப்பந்தப் பணியாளர்கள் தான். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 ஒப்பந்த பணியாளர்ளையும் பணியில் இருந்து நீக்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

Tags : மதுரை மாநகராட்சியில் பல கோடி முறைகேடு வழக்கில்  5 தற்காலிக பணியாளர்கள் கைது.

Share via