பெட்ரோல் ஊற்றி திருச்சி இளைஞரை எரித்த புதுச்சேரி பாஜக நிர்வாகி நீக்கம்
பெட்ரோல் ஊற்றி திருச்சி இளைஞரை எரித்ததாகக் கைதானதைத் தொடர்ந்து, புதுச்சேரி பாஜகவிலிருந்து வணிகப்பிரிவு மாநில அமைப்பாளர் ராஜமவுரியா நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). கூலி தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வேலை தேடி வந்தபோது, கடந்த 25-ம் சதீஷ்குமார் தேதி நள்ளிரவு மேட்டுப்பாளையம் 4 முனை சாலை சந்திப்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஓரமாக தூங்க சென்றுள்ளார்.
அப்போது, சதீஷ்குமாரை பார்த்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பாஜக வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜமவுரியா உள்ளிட்ட 7 பேர் யார், எந்த ஊர் என்று விசாரித்து தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து சதீஷ்குமார் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். தற்போது தீக்காயங்களுடன் சதீஷ்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகிய 4 பேரையும் கைது காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பொதுச்செயலர் மோகன்குமார் கூறுகையில், "பாஜக ஒழுங்கு நடவடிக்கைக்குழு மற்றும் மாநிலத்தலைவர் சாமிநாதன் ஆகியோருடன் ஆலோசித்தோம். கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் வணிகப்பிரிவு மாநில அமைப்பாளர் ராஜமவுரியா கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று குறிப்பிட்டார்.
Tags :