அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது  மீண்டும் 58 ஆக குறைக்க திட்டம் 

by Editor / 31-07-2021 04:48:17pm
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது  மீண்டும் 58 ஆக குறைக்க திட்டம் 



தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58 வயதாக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் என 12 லட்சத்திற்கும் கூடுதலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வயது 58 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிதிச் சிக்கலினால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி, அப்போதைய முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்கால பணப் பயன்களை வழங்குவது தவிர்க்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, கடந்த பிப்., கொரோனா 2வது அலை தீவிரமடைந்த போது,அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி கடந்த அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், ஓய்வு வயதை அதிகரிப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.


இதனிடையே, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், இதன்மூலம் 40 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து அரசு இன்னும் மீளாததால், ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பயன்கள் வழங்குவதில் சாத்தியமில்லை. எனவே, அரசு பத்திரம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை செலுத்தி பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via