தேமுதிக தலைவர்விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

by Editor / 29-12-2023 10:17:21pm
  தேமுதிக தலைவர்விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) நேற்று 28 ஆம் தேதி  காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.  இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  அங்கு விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள்,  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து,  பொதுமக்களின் கூட்டம் அலை மோதியதால் விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதன்படி, இன்று தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது.  பின்னர் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இதனை அடுத்து சரியாக 2.45 மணி அளவில் தீவுத்திடலில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.  தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபுறமும் நின்று விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு மாலை 6 மணி அளவில் வந்தடைந்தது.  அங்கு விஜயகாந்த் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பின்னர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது.

பின்னர் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,  தா.மோ.அன்பரசன்,  மா.சுப்பிரமணியன்,   உதயநிதி மற்றும் திமுக எம்.பி  டி.ஆர்.பாலு ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதே போன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  பெஞ்சமின்,  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்பி,  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்

பின்னர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கோவர்த்தன் தலைமையிலான ஆயுதப்படை காவலர்கள் 24 பேர் 3 சுற்றுகள் என 72 குண்டுகளை விண்ணை நோக்கிச் சுட  விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

Tags : தேமுதிக தலைவர்

Share via

More stories