100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி சிக்காமல் திருடிய ஊழியர்கள் சிக்கியது எப்படி.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பிரபல நகைக்கடையில் 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி ஆகியவற்றை 2 பெண் ஊழியர்கள் உதவியுடன் அதே கடையில் வேலைபார்க்கும் வாலிபர் பல மாதங்களாக திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் அருமனையை சேர்ந்த அனீஷ் (29) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் உரிமையாளருக்கு தெரியாமலும், சிசிடிவி கேமராவில் சிக்காமலும் தினமும் நகையை திருடி வந்துள்ளார். நிறைய நகைகளை திருடினால் உரிமையாளர் கண்டுபிடித்துவிடுவார் என்று நினைத்த அனீஷ், தன்னுடன் பணிபுரியும் 2 பெண் ஊழியர்களிடம் நகை ஆசை காட்டி உள்ளார். அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி வந்துள்ளனர்.ஒருகட்டத்தில் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை உரிமையாளர் கூர்ந்து கவனித்தபோது, அனீஷ் நகையை எடுத்து செல்வதும், திரும்பி வரும்போது நகை கையில் இல்லை என்பதையும் கவனித்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவரை கண்காணித்தபோதுதான் அனீஷ், 2 பெண் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து மொத்தம் 100 பவுனுக்கும் மேல் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி கொலுசுகள் என்று அனைத்தையும் ஆட்டைய போட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருடிய நகை, கொலுசுகளில் சிலவற்றை திருட்டுக்கு பக்க பலமாக இருந்த 2 பெண் ஊழியர்களுக்கும் போட்டு அனீஷ் அழகு பார்த்து உள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் திருட்டு நடந்தது உறுதியானது. இதையடுத்து அனீஷ் மற்றும் 2 பெண் ஊழியர்களைப் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Tags : 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி சிக்காமல் திருடிய ஊழியர்கள் சிக்கியது எப்படி.