மனைவியை கொலை செய்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கணவரும் சிகிச்சை பலன் இன்றி பலி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56), இவரது மனைவி மருதம்மாள்(54). இவர்களுக்கு விமலா என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.
இன்னாசிமுத்து தற்போது பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்னாசிமுத்து மற்றும் அவரது மனைவி மருதம்மாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் இன்னாசிமுத்து வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது மட்டுமின்றி துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அதே ஊரில் வசிக்கும் மருதம்மாளின் சகோதரர் சின்ன மருதுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வந்த சின்ன மருது, அவரது மகன் மகேஷ் இருவரும் விரைந்து வந்து வீட்டின் கதவினை தட்டிப்பார்த்து உள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கவில்லை வீட்டில் இருந்த வீட்டு ஜன்னல் வழியாக பார்த்த போது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து வீட்டின் கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த இன்னாசிமுத்து, சின்ன மருதுவினை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி உள்ளார். இதில் காயமடைந்த சின்ன மருது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் மருதம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேசன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் தப்பியோடிய இன்னாசிமுத்துவினை போலீசார் தேடிவந்த நிலையில், பாண்டவர்மங்கலம் அருகே மயங்கி நிலையில் இன்னாசி முத்து கிடந்துள்ளார் . அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவியை கொலை செய்து விட்டு இன்னாசி முத்தும் விஷம் அருந்தி இருந்தது தெரிய வந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் இன்னாசிமுத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்
Tags : மனைவியை கொலை செய்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கணவரும் சிகிச்சை பலன் இன்றி பலி.