கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

by Editor / 18-09-2021 12:17:14pm
கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று(செப்.,18) பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்., இடதுசாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை . காங்., சார்பில் ஹசன் மவுலானா எம்எல்ஏ., மட்டும் பங்கேற்றார். நாகாலாந்து மாநில கவர்னராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான, மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய போது, ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில், வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றினார்.

தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றவர். நாட்டின் எல்லைகளில் உள்ள மக்களின் சமூக அரசியலில் பெரும் பங்காற்றியவர். இன்று காலை 10:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், தமிழக கவர்னராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து கவர்னர் ரவிக்கு, ஸ்டாலின் புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

சஞ்சீப் பானர்ஜி, ரவி மற்றும் அவரது மனைவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை, புதிய கவர்னர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். விழாவில், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் வாசன், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே. மணி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தி.மு.க., எம்.பி., கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

Tags :

Share via