அரசு நகரப் பேருந்துகளில் இலவச  பயண திட்டத்திற்கு ரூ.1358 கோடி நிதி ஒதுக்கீடு  அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் 

by Editor / 31-07-2021 11:38:39am
அரசு நகரப் பேருந்துகளில் இலவச  பயண திட்டத்திற்கு ரூ.1358 கோடி நிதி ஒதுக்கீடு  அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் 


 

தமிழகத்தில் பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1358 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
திருப்புவனத்தில் இருந்து மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம், கழுவன்குளம், மிளகனூர், கீழச்சொரிக்குளம், பிரமனூர், சிவகங்கை- மானாமதுரை வழியாக காளையார்கோயில் என ஏழு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் கலந்துகொண்டு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசியதாவது:


கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் போக்குவரத்து துறை மிகவும் சீர்கெட்டு ரூ 33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு நாளொன்றுக்கு 13 ஆயிரம் பேருந்துகள் வரை மட்டுமே தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது.


திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் போக்குவரத்து துறை சீர்செய்யப்பட்டு தினமும் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு விரைவில் தினமும் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதன் மூலம் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளில் தேவையான பேருந்து வசதிகள் செய்து தரப்படும். தமிழகத்தில் பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1358 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

 

Tags :

Share via