உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் இனி குறிப்பிடப்படாது அமைச்சர் மூர்த்தி
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இடத்தில் நடைபெறும் ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ளது. முதல் போட்டியானது அவனியாபுரத்திலும், இரண்டாவது போட்டி பாலமேட்டிலும், மூன்றாவது போட்டி அலங்காநல்லூர் நடைபெற உள்ளது. முதல் போட்டி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இடத்தில் நடைபெறும் ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் 95% முடிவடைந்துள்ளது. ஏற்பாடுகளில் உள்ள சின்ன சின்ன தவறுகளை உடனடியாக சரி செய்ய கூறியுள்ளோம். குறைந்தபட்சம் 1000 காளைகளாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம்.
600 முதல் 700 காளைகளுக்காக வாடிவாசல் பின் கதவு பெரிதாக அமைக்கப்பட்டு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 1000 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். 3400 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காளைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் எவ்வளவு காளைகள், எவ்வளவு மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதை அறிவித்து விடுவார்கள்.
அவனியாபுரத்தில் தகுதியான மாடுபிடி வீரர்கள் 650 பேர் இருக்கிறார்கள். தேர்வுகள் செய்து 600 மாடுபிடி வீரர்கள் நாளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஜல்லிக்கட்டு மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தனியாக அமைச்சர் அமைக்கப்பட்டு முதலமைச்சர் தலைமையில் ஜனவரி 23-ம் தேதி போட்டிகள் நடப்பது குறித்து அறிவிக்கப்படும்.
உயர்நீதிமன்ற உத்தரவிட்டதன் பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சாதி பெயர் குறிப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த ஆண்டு காளைகளின் பெயர், ஊரை மட்டுமே குறிப்பிடுவார்கள். அரசியல் தலைவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. மொத்தம் 1000 காளைகள் தான் ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கபடும் இதில் எந்த பாரபட்சமும் கிடையாது” என்று தெரிவித்தார்.
Tags : உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் இனி குறிப்பிடப்படாது அமைச்சர் மூர்த்தி