போலி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து விட்டு ரூ.20 ஆயிரம் திருடியவர் கைது
தேசூரில் போலி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து விட்டு ரூ.20 ஆயிரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேசூரை அடுத்த தக்கன்ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 52). இவர் தேசூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது இவருக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரிடத்தில் பாபு தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.20 ஆயிரம் எடுத்து தரும்படி கூறினார்.
அப்போது பாபு கொடுத்த ஏ.டி.எம்.கார்டை வைத்துக்கொண்டு வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை அந்த நபர் எந்திரத்தில் செலுத்தி பணம் இல்லை என்று கூறி பாபுவிடம் கொடுத்துவிட்டு ஓடி விட்டார். ஆனால் பாபுவின் செல்போனுக்கு ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இது குறித்து தேசூர் போலீசில் பாபு புகார் செய்தார். அதன்பேரில் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேசூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தன்னிடம் போலி கார்டை கொடுத்து விட்டு ஓடியவரின் அடையாளத்தை பாபு காண்பித்தார்.
பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் அந்த மர்மநபர் வந்தவாசியை அடுத்த சலுக்கை கிராமத்தில் வசிக்கும் ரகுராமன் மகன் விஜயன் (28) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் பாபுவின் ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.20 ஆயிரம் திருடியதை ஒப்புக்கொண்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனை தொடர்ந்து விஜயனை தேசூர் போலீசார் கைது செய்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags :