‘ரேடியோ’ மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

by Admin / 04-08-2021 01:21:05pm
‘ரேடியோ’ மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்



திருக்குறள், நற்சிந்தனைகள், பழமொழி, விடுகதை, கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் என பல்வேறு பாடங்கள் ரேடியோ மூலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

‘தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமநாதன்.
 
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி மலைப்பகுதியை சேர்ந்த இவர், கடந்த 2006-ம் ஆண்டு பெரிய தெற்குக்காடு பள்ளியில் பணியில் சேர்ந்தார். மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது, செயல்முறை பயிற்சி அளிப்பது, புரொஜெக்டர் மூலமாக பாடம் நடத்துவது என மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவதை ராமநாதன் வழக்கமாக கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி மூடப்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில், ‘ரேடியோ’ மூலம் ஆசிரியர் ராமநாதன், மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.

இதுகுறித்து ஆசிரியர் ராமநாதன் கூறியதாவது:-

‘இன்னோவேடிவ் டீச்சர் டீம் தஞ்சாவூர்’ என்ற பெயரில், பிளே ஸ்டோரில் உள்ள ஆங்கர் என்ற செயலியை பயன்படுத்தி, கல்வி வலையொலி (ரேடியோ) தொடங்கி பாடம் நடத்தப்படுகிறது. திருக்குறள், நற்சிந்தனைகள், பழமொழி, விடுகதை, கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் என பல்வேறு பாடங்கள் ரேடியோ மூலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின்படி ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களை கொண்டு வகுப்பு நடத்துகிறோம்.

வகுப்பிற்கான இணைப்பு(லிங்க்) ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆசிரியர்களின் ‘வாட்ஸ் அப் குரூப்’ மூலம் அனுப்பி வைக்கப்பட்ட, அவர்கள் மூலம் அந்தந்த பகுதி மாணவர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கல்வி ரேடியோ தொடங்கப்பட்டு 2 வாரங்களில், என்னுடைய லிங்க்கைப் பயன்படுத்தி 5 ஆயிரத்து 200 மாணவர்கள், 11 நாடுகளில் இருந்து ஒலிபரப்பை கவனித்து உள்ளனர். எனது பள்ளியில் உள்ள 60 மாணவர்களில் சராசரியாக 50 மாணவர்கள் தினசரி பாடத்தை கவனிக்கின்றனர். பெற்றோர் வேலை முடிந்து வீடு திரும்பியதும் அவர்களது செல்போனை பயன்படுத்தி எப்போது வேண்டும் என்றாலும் பாடத்தை படிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிராமப்புற பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரின் இந்த முயற்சிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோரும் ஆசிரியர் ராமநாதனை பாராட்டினர்.

 

Tags :

Share via