மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது !

by Editor / 26-05-2021 07:39:49am
மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது !

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. இந்த நாட்டில் தற்போது இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் அதிபர் இப்ராஹிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக பா டாவ் இருந்து வருகிறார். பிரதமராக மொக்தார் உவானே பதவி வகிக்கிறார்.

இதுபோன்ற அடுத்தடுத்து நிகழும் அரசியல் நடவடிக்கைகளால் அந்நாட்டு மக்கள் பதற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அமைச்சரவை சீரமைப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் ராணுவ அமைப்பில் இருந்த 2 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அதிபரை கைது செய்தனர்.

இதேபோல் பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியான சொலேமான் டவ்கோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அந்நாட்டில் மேலும் பதற்ற நிலை காணப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிமக்கள் ஆட்சியை கொண்டு வர தற்காலிக அரசு முயற்சி செய்து வருகிறது. எனினும், முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி அதிகாரத்தில் இருந்து வருவது ஆளும் அரசுக்கு இடையூறாக உள்ளது. இதனை மாற்றி மக்களாட்சி நிறுவும் வகையில் செயல்பட்ட அதிபர், பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆட்சி மீண்டும் ராணுவத்தின் கைக்குள் வரவுள்ளது.

 

Tags :

Share via