மிரட்டும் சூறைக்காற்று: இருளில் ராமேஸ்வரம்!

by Editor / 26-05-2021 07:36:31am
மிரட்டும் சூறைக்காற்று: இருளில் ராமேஸ்வரம்!

வங்கக்கடலில் ''யாஸ்'' புயல் மையம் கொண்டதால் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரித்து காணப்பட்டது. பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை நேற்றும் தொடர்ந்தது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று நான்காவது நாளாக பலத்த சூறைக்காற்று வீசியது. ராமேஸ்வரம் நகர் பகுதியில் சுழன்றடித்த சூறைக்காற்றினால் சாலையில் மணல் விசிறியடித்தது. ஊரடங்கினால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. கடலும் நேற்று முன்தினத்தை விட அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. பாம்பன் சின்னப்பாலம், தோப்புக்காடு பகுதியில் கடல் சீற்றத்தினால் தடுப்பு சுவரை தாண்டி கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூர கயிற்றை அறுத்துக்கொண்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த படகின் மீது மோதி சேதமடைந்து ஒன்றுடன் ஒன்று சிக்கியது. குந்துகால் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடல் அலையினால் இழுத்து வரப்பட்டு கரை ஒதுங்கின. பலத்த காற்றில் சேதமடைந்த படகுகளை பார்வையிட மீனவர்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு சென்றனர். புயலின் தாக்கத்தினால் நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு மேல் வீசிய சூறைக்காற்றை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். உள்வாங்கிய கடல்: ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் நேற்று காலை நேரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன. பின்னர் சிறிது ேநரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதால் மீனவர்கள் நிம்மதியடைந்தனர். மரம் விழுந்து பெண் பலி: நேற்று மாலை 6 மணிக்கு மேல் பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

இதனால் மாலை 5.15 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமநாதபுரம் அருகே சம்பை மேட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி கார்த்திகா (26), நேற்று மாலை வீட்டின் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்போது பனைமரம் விழுந்து பலியானார். குமரியில் கனமழை: கன்னியாகுமரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி, சுண்டபற்றிவிளையில் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு பயணிகள் நிழற்குடை பெயர்ந்து விழுந்தது. குளச்சல் சிங்காரவேலன் காலனி பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக-கேரளா எல்லையில் கிண்ணக்கொரை-தாய்சோலா இடையே உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண் சரிவுடன் பெரிய பாறைகள் உருண்டுள்ளது. சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதையுண்டு போனது.

 

Tags :

Share via