அரசு கட்டிடத்தை காணவில்லை என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் பரபரப்பு.
தென்காசி மாவட்டம், தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவராக உள்ள சத்யராஜ் என்பவர்,அரசு கட்டிடத்தை காணவில்லை என பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், குத்துக்கல்வலசை ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகம் ஒன்று செயல்பட்டு வந்த நிலையில், அந்த கட்டிடத்தை ஊராட்சி தலைவராகிய தனக்கு தெரியாமலும், தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல் நல்ல நிலைமையில் இருந்த அந்த கட்டிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டு விட்டதாகவும், எந்த விதமான அனுமதியும் பெறாமல் உள்நோக்கத்தோடு கட்டிடத்தை இடித்த நபர்களான குத்து கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அந்த கட்டிடத்தை திரும்பி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், அரசு கட்டிடத்தை அதிகாரிகளுக்கு தெரியாமல் அப்புறப்படுத்தி அதில் இருந்த தளவாடங்களை இரும்பு கடையில் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்த நிலையில் அந்த மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
குறிப்பாக, அரசு கட்டிடத்தை அரசு அதிகாரிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் தெரியாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் கொடுத்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : அரசு கட்டிடத்தை காணவில்லை என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் பரபரப்பு.