ஒலிம்பிக்கில் பங்கேற்ற வாள்வீச்சு  வீராங்கனை பவானி தேவி மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

by Editor / 04-08-2021 04:14:20pm
ஒலிம்பிக்கில் பங்கேற்ற வாள்வீச்சு  வீராங்கனை பவானி தேவி மு.க.ஸ்டாலினை   சந்தித்தார்.


ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.


டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் 100-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் வாள்வீச்சுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். இரண்டாவது சுற்று வரை முன்னேறிய அவர், பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.


இதையடுத்து, சென்னை திரும்பிய அவர்,  தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தன் தாயாருடன் சந்தித்தார்.
இதன்பின், பவானிதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


"ஒலிம்பிக்கில் நாங்கள் விளை யாடியதை முதல்வர் பார்த்துள்ளார். மிகவும் நன்றாக விளையாடியதாக மிகவும் பாராட்டினார். போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பும் எங்களுடன் இருமுறை கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார். எங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என்றும் கூறினார்.


இந்தியாவிலேயே முதல் முறையாக வாள்வீச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக்கூடியதாக இது அமைந்துள்ளது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அதைக் குறிப்பிட்டு என் அம்மாவையும் முதல்வர் பாராட்டியிருந்தார்.


முதல்வருக்கு என்னுடைய வாளை நான் பரிசாகக் கொடுத்தேன். இந்தியாவில் வாள்வீச்சில் முதல் முறையாகப் பயன்படுத்திய வாள் என்பதால் அதனைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும், அதற்கு இந்த வாள் தேவை எனக்கூறி எனக்கே அதைத் திருப்பிப் பரிசாகக் கொடுத்தார்.
என்ன உதவியானாலும் செய்யத் தயார், அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் எனக் கூறினார். தமிழக அரசின் உறுதுணை நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்திருந்தார். நான் மின்துறையில் வேலை செய்வதால் அது குறித்தும் முதல்வர் கேட்டிருந்தார்.


இதனையடுத்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனையும் சந்தித்தோம். அவரும் என் அம்மாவைப் பாராட்டினார். வருங்காலத்தில் உதவிகரமாக இருப்பதாக நம்பிக்கை அளித்தார். அடுத்ததாக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியையும் சந்திக்க உள்ளோம்.


இந்த அளவு நான் சென்றிருக்கிறேன் என்றால், எஸ்டிஏடி (sport development authority of tamilnadu) அமைப்பிலிருந்து வரும் 'எலைட் ஸ்காலர்ஷிப்' எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த உதவி, கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு முக்கியமாக இருந்தது. வெளிநாடுகளில் பயிற்சி பெற்று, ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட முடிந்தது. எதிர்காலத்தில் நன்றாக விளையாடி நம் நாட்டுக்கு அதிக பதக்கங்களை வெல்வேன்.என பவானி தேவி தெரிவித்தார்.

 

Tags :

Share via