திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகளை தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு

மருத்துவக்கல்லூரி கட்டிடம், ஆய்வகம், மருத்துவக்கல்லூரியில் உள்ள வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டிடப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஏக்கர் பரப்பளவில் ரூ. 336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவகல்லூரி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது கல்லூரி கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மருத்துவக் கல்லூரிக்காக மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், தமிழக அரசு ரூ. 141 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்தநிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான அங்கீகார சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த குழுவினர் ஆய்வை தொடங்கினர். இதில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர்கள் 2பேர் பங்கேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவக்கல்லூரி, குடியிருப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மேற்கொண்டு விரைவாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். இன்று இரண்டாவது நாளாகவும் ஆய்வு செய்தனர்.
அப்போது மருத்துவக்கல்லூரி கட்டிடம், ஆய்வகம், மருத்துவக்கல்லூரியில் உள்ள வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மருத்துவக்கல்லூரியில் உள்ள துறைகள், அவற்றில் பணியாற்ற உள்ளவர்களுக்கான இடங்களை சரி பார்த்தனர். அதேபோல் மத்திய அரசு வழங்கும் லெட்டர் ஆப் பெர்மிஷன் எனப்படும் அங்கீகார அனுமதி சான்று வழங்குவதற்கான ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
Tags :