இயற்கை வேளாண்மைக்கென  தனி கவனம் அளிக்கப்படும்: முதல்வர் 

by Editor / 06-08-2021 03:41:27pm
 இயற்கை வேளாண்மைக்கென  தனி கவனம் அளிக்கப்படும்: முதல்வர் 

 

சென்னையில் தரமணி எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்கள் குறித்து  சர்வதேச மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   


இந்த மாநாட்டை தொடங்கிய பின்பு பேசிய முதல்வர்: பசிப்பிணி ஒழிப்பை இலக்காக கொண்டு எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தான் எம்.எஸ் சுவாமிநாதனின் ஆலோசனைகளை செயல்படுத்தியவர். திமுக எப்போதுமே  தமிழ் பண்பாட்டையும், தமிழ் இனத்தையும் மதிக்கும் அரசாகத்தான் இருக்கும்.


இந்தாண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட  உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவையில் வரும் 14ம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், வேளாண்மைதான் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ளது. அதற்கு சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறோம். விவசாயித்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, இயற்கை வேளாண்மைக்கு தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராம சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை, நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய திட்டம், சென்னை பெருநகரத்தை வெள்ள நீர் சூழாமல் இருக்க, பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.


விவசாயத்திற்கு திமுக தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இயற்கையை சீர்குலைத்து விடாமல் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்த அமைச்சரவையில் பதவிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது. நீர்வளத்தை பாதுகாப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் துறை என்பதை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை என மாற்றப்பட்டுள்ளது என இம்மாநாட்டில் முதல்வர்  உரையாற்றினார்.

 

Tags :

Share via