மதுசூதனன் உடலுக்கு எடப்பாடி – ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின் நேரில் மலர் அஞ்சலி

மறைந்த அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, எடப்பாடி, ஓ.பன்னீசெல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சசிகலாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் மசூதனன் (வயது 81) வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செயற்கை சுவாச கருவியுடன் டாக்டர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை மோசமடைந்தது. வியாழன் மதியம் 3.42 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
மரணமடைந்த மதுசூதனன் உடல் மருத்துமவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று மதுசூதனன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர்கள் விருகை வி.என். ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மதுசூதனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். மதுசூதனன் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.மேலும் அங்கிருந்த அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் ஸ்டாலின் உரையாடினார்.
Tags :