பொன்னேரியில் ரெயிலை சிறைபிடித்து பயணிகள் மறியல் போராட்டம்

by Admin / 06-08-2021 04:52:49pm
பொன்னேரியில் ரெயிலை சிறைபிடித்து பயணிகள் மறியல் போராட்டம்



பயணிகளின் போராட்டத்தால் கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த ரெயில்களும், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த அனைத்து ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில்களில் பணிக்கு செல்வது வழக்கம்.

 கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சென்னைக்கு செல்லும் அனைத்து மின்சார ரெயில்களும் தாமதமாக வந்தன. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மின்சார ரெயில்கள் தாமதம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து வழக்கம் போல் ரெயில்கள் அரைமணி நேரம் முதல் ஒரு ž மணிநேரம் வரை தாமதமாக வந்து சென்றன.

இந்த நிலையில் இன்று காலை 8.10 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் மின்சார ரெயிலுக்காக பொன்னேரி ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

ஆனால் 8.45 மணிவரை ரெயில் வரவில்லை. இதற்கிடையே பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

இதனால் சென்ட்ரலுக்கு செல்லும் மின்சார ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் வேளச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த மின்சார ரெயிலை சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார ரெயில் டிரைவரையும் கீழே இறங்குமாறு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த ரெயில்களும், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த அனைத்து ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதன்காரணமாக அந்த ரெயில்களில் இருந்த பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். பயணிகளின் போராட்டம் பற்றி அறிந்ததும் பொன்னேரி போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் சென்ட்ரலில் இருந்து ரெயில்வே பொது மேலாளர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி பயணிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி வரை போராட்டம் நீடித்தது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது கிடையாது. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. நாங்கள் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

பொன்னேரி ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரெயிலை எடுக்க வேண்டும். அந்த ரெயிலால் சரக்கு ரெயில்கள் போவதில் சிரமம் ஏற்பட்டு மற்ற ரெயில்கள் தாமதம் ஆகிறது’ என்றனர்.

 

Tags :

Share via