அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள்: தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலியில் பட்டப்பகலில் இளைஞர் கொடூரக்கொலை, சிவகங்கையில் இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை கொடுங்கையூரில் மது விருந்தில் பங்கேற்ற நபர் படுகொலை, தஞ்சாவூரில் முதியவர் ஒருவர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டிக் கொலை, ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் மற்றும் திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர் கொலை என நாள்தோறும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் சர்வ சாதாரணமாகிப் போன கொலை தொடர்பான செய்திகள் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றன. எனவே, குற்றச் சம்பவங்கள் பலவற்றிற்கும் முக்கிய காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags :