குற்றால அருவிகளில் குளிப்பதற்கு 6வது நாளாக தடை ரூபாய் 5 கோடிக்கு மேல் இழப்பு.

by Editor / 23-05-2024 09:58:50am
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு 6வது நாளாக தடை ரூபாய் 5 கோடிக்கு மேல் இழப்பு.

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு 6வது நாளாக தடை நீடித்து வரும் நிலையில் ரூபாய் 5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க கோரி வியாபாரி சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாகவும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிறுவன் உயிரிழந்த நிலையிலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது மெயின் அருவி,பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையிலும் குளிப்பதற்கான தடை 6வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில் குற்றாலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், குற்றாலம் அருவிகளை நம்பி ஏராளமான குடும்பத்தினர் உள்ளனர். தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தடை உத்தரவு நீடித்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் வராத நிலையில் சுமார் 5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
எனவே முறையான கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்

 

Tags : குற்றால அருவிகளில் குளிப்பதற்கு 6வது நாளாக தடை ரூபாய் 5 கோடிக்கு மேல் இழப்பு.

Share via