நான்கு வருடமாக தூய்மைபணியாளர்களுக்கு பணம் பெறாமல் டீ வழங்கி வரும் டீக்கடைக்காரர்.

by Editor / 02-06-2024 11:54:54pm
நான்கு  வருடமாக தூய்மைபணியாளர்களுக்கு  பணம் பெறாமல் டீ வழங்கி வரும் டீக்கடைக்காரர்.

தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன் (50). கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா எனும் நோய் பரவி வந்த நேரத்தில் அவரும் அதில் பாதிக்கப்பட நேர்ந்தது..
2 மாதங்கள் கொரோனா தாக்கத்தால் பல்வேறு விதமான உடல் உபாதைகளை அனுபவித்து வந்த நிலையில் வாழ்க்கை எவ்வளவு சுருக்கமானது என்பதை உணர்ந்து ஒருவேளை உயிருடன் இருந்தால் இனி வரும் நாட்களில் பிறருக்கு இயன்றதை செய்ய வேண்டும் என ஒரு உறுதிபாட்டை எடுத்துள்ளார்.  கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு மீண்டும் வெளி உலகைபார்க்கும்போது மறுபிறவி எடுத்ததை போல உணர்ந்துள்ளார்.

அப்போது தன்னார்வ தொண்டு இயக்கங்கள் அரசியல்வாதிகள் தனிப்பட்ட நபர்கள் என ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு அரிசி பருப்பு அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் என பல்வேறு உதவிகளை அவரவர் தகுதிக்கு ஏற்ப கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமல்லாமல் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவியதை பார்த்து தானும் இதுபோல உதவ வேண்டும் என நினைத்தார்.
அப்போது கொரோனா காலகட்டத்தில் உலகமே மீண்டு வர பெரும் பங்கு வகித்த துப்புரவு பணியாளர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அவர்களின் அத்தியாவசியத்தையும் அறிந்து கொண்டு அவர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தார். 
தன்னிடம் இருப்பது டீக்கடை மட்டும்தான் சரி இன்றிலிருந்து நம் டீ கடைக்கு வரக்கூடிய துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் பணம் பெறாமல் டீ வழங்கலாம் என மூலிகை செய்தார். 

அன்றிலிருந்து இன்று நான்காவது வருடமான நிலையிலும் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு முகம் சுளிக்காமல் எத்தனை முறை வந்தாலும் எப்பொழுது வந்தாலும் தனது டீக்கடையில் பணம் பெறாமல் முதல் தடவை வருவதைப் போலவே வரவேற்று அவர்களுக்கு டீ வழங்கி வருகிறார்.

கொரோனா காலகட்டம் தான் முடிந்தது இப்பொழுதாவது பணம் பெற்றுக் கொள்ளுங்கள் என பணம்கொடுத்தால் கூட பணம் அதை வாங்காமல் பணம் கொடுத்து டீ குடிப்பதாக இருந்தால் இங்கு வரவேண்டாம் என்னை ஸ்ட்ரிக்டாக கூறி விடுகிறார்.

ஒவ்வொரு துப்புரவு பணியாளரும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை பணம் கொடுக்காமல் டீ குடிப்பதால் தங்களுக்கு மாதம் 600 ரூபாய்  மாத வருமானத்தில் மிச்சப்படுவதாகவும், குறைந்தபட்ச வருமானத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு 600 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை எனவும் ராமகிருஷ்ணன் தங்களுக்கு கிடைத்திருப்பது வரப்பிரசாதம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள்ராமகிருஷ்ணனின் கடைக்கு சென்று வாடிக்கையாக டீ குடித்து வருகின்றனர்.அதைப்போலவே அவரின் கடைக்கு வரக்கூடிய பச்சிளங்குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலுக்கு பணம் பெறுவதில்லை என்பதும் கூடுதல் தகவல் .அடிப்படையில் பால் வியாபாரியான ராமகிருஷ்ணன் 2015 ஆம் ஆண்டு முதல் டீ கடையை நடத்தி வருகிறார். டீக்கடை ஆரம்பித்து 8 ஆண்டுகளில் கொரோனாவிற்கு பின்பு எனது கடை வியாபாரம் மனத் திருப்தியுடன் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : நான்கு வருடமாக தூய்மைபணியாளர்களுக்கு பணம் பெறாமல் டீ வழங்கி வரும் டீக்கடைக்காரர்.

Share via