உலக தாய் பால் தினமின்று!

by Editor / 01-08-2024 09:23:59am
உலக தாய் பால் தினமின்று!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாகக் கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது. 

இந்தியா உள்பட 170 நாடுகளில் 1991 முதல் அமலில் உள்ளது. ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்குத் தாய்ப்பால் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலைத் தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது தவறாகும். ஒரு தாய் குழந்தையைப் பிரசவித்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையாக இருந்தால் குழந்தை பிறந்து 2 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து.

குழந்தை பிறந்த உடன் மஞ்சள் நிறத்தில் வெளிப்படும் பால் கொலஸ்ட்ரோம் என்று அறியப்படுகிறது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வகை மஞ்சள் நிறப் பாலில் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் கூடுதல் ப்ரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அவர்களுடைய மன நிலை அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும். குழந்தையை மாரோடு அணைத்துக் கொடுக்கப்படும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாறாக மன அமைதி இல்லாமல் வெறுப்புடன் தாய் குழந்தைக்கு பாலூட்டும் போது தாய்ப்பாலின் அளவு குறைந்து குழந்தையை மனரீதியாக பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்மார்கள் பசும்பாலை புட்டியில் நிரப்பிக் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இது மிகவும் தவறான செயலாகக் கூறப்படுகிறது. மாறாக தாய்ப்பாலைப் புட்டியில் நிரப்பி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

நன்றாகக் கழுவிய சுத்தமான பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்படும் தாய்ப்பாலானது ஒரு அறையில் சாதாரண வெப்பநிலையில் 6 முதல் 8 மணி நேரமும், அந்தப் பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது 18 முதல் 24 மணி நேரம் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.

தாய்ப்பால் கொடுத்த பிறகு குழந்தையின் பின்புறத்தை மெதுவாக தடவிகொடுப்பது நல்லது இந்த செயல் குழந்தைக்கு வாந்தி ஏற்படுவதை தவிர்க்கும். இரவு நேரங்களிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். வரும் காலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு செயற்கை உணவுகளை தவிர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தங்களுடைய உடல் அழகு பாதிக்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் தவறாகும். தாய்ப்பாலின் மூலம் பெற்றோருக்கும், குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே குழந்தை பாதுகாப்பு அமைப்பாளர்களின் கருத்து.

 

Tags :

Share via