உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 1லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல்

by Staff / 27-01-2023 01:38:00pm
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 1லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நிலை கண்காணிப்பு 2 குழுவினர் எல்லை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது ரூ1லட்சத்து 17 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கருங்கல்பாளையம் கே. எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த அணில் லகோதி (36) என்பதும் அதே பகுதியில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. கடையில் வசூலான தொகையை கொண்டு வந்த போது நிலை கண்காணிப்பு குழுவினரிடம் சிக்கியது தெரிய வந்தது. இந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து மாநகராட்சியில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அணில் லக்கோதிடம் அறிவுறுத்தினார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1. 34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 2-வது முறையாக நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை மீட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via