எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்,முதல்வர் ஸ்டாலின்.

by Editor / 16-06-2024 12:26:32am
 எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்,முதல்வர் ஸ்டாலின்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

“ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் ஆதரவு தந்திருக்காவிட்டால் என்டிஏ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடையாது.  அவர்களால்தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார். நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 237 உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பாஜக நினைத்தையெல்லாம் செய்ய முடியாது.

இப்போதுகூட, தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். இப்படி கேள்வி கேட்டு அவர்கள் நம்மை இழிவுபடுத்தவில்லை,நாட்டு மக்களைத்தான் இழிவு படுத்துகிறார்கள்.  “40 பேர் கேண்டீனில் வடை சாப்பிடச் செல்கிறீர்களா?” என்று சிலர் கேட்கிறார்கள். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்கள் வேலை. எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள், 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள் 9 ஆயிரத்து 695 கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதைவிட முக்கியமாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஏன், பிரதமர் மோடி என்று ஒட்டுமொத்த பாஜக அமைச்சர்களும் திமுகவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியிருந்தார்கள்.

பாஜகவுக்கு அதிகப் பெரும்பான்மை இருந்தபோதே, தங்களுடைய வாதங்களால் நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இப்போது பாஜக அரசுக்கு அடங்கிப் போவார்களா? மக்களுக்கான நம்முடைய குரல் இன்னும் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.  கொள்கைரீதியாக பாஜக வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.

மேடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களே நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான பாஜக அரசை, பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள். ஒற்றுமை உணர்வுடன், கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கு, உங்களுக்கு வாய்ப்பு வழங்கிய கட்சித் தலைமைக்கு உண்மையாக நடந்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். இந்த 40 எம்.பி.க்களை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கின்ற பாஜகவை தடுக்கின்ற காவல் அரணாக நம்முடைய 40 எம்.பி.க்களும் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இது கலைஞரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டு. ஆண்டு முழுவதும் நாம் கட்சி சார்பாகவும், ஆட்சி சார்பாகவும் நலத்திட்ட நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், கவிதை – கட்டுரை போட்டிகள், கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள் என்று கொண்டாடினாலும், அவருக்கு பிடித்த பரிசு திமுக கூட்டணியின் வெற்றிதான்.

எப்போதும், எந்த நேரமும், எந்தச் சூழலிலும் கட்சியின் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவருக்கு, ‘நாற்பதுக்கு நாற்பது’ என்பதைவிட சிறப்பான நூற்றாண்டு பரிசு, வேறு என்னவாக இருக்க முடியும்? 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகத்தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால், திமுக கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகித்திருக்கிறது.

அடுத்து, இன்னும் சிறிது நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும், நம்முடைய கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாதான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். தொடர் வெற்றியால் எனக்கு மமதை வந்துவிடவில்லை; ஆணவம் ஏற்படவில்லை. மாறாக எனக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை என்ற மனநிறைவைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு நான் அளிக்கின்ற உறுதிமொழி என்னவென்றால், எங்களை நம்பி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது.

உங்களுக்காக உழைப்பதுதான் எங்களுடைய கடமை. எங்களுடைய கடமையை நாள்தோறும் செய்வதுதான் நாங்கள் உங்களுக்கு செலுத்தும் நன்றி. அந்த நன்றி உணர்வுடன் சொல்கிறேன். இனி தமிழ்நாட்டில் எப்போதும் திமுக ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம். சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றியது என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம்”என்றார்.

 

Tags :  எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்,முதல்வர் ஸ்டாலின்.

Share via