மதுரையில் போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது.
தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அன்று பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்த போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது செய்யப்பட்டார். திருச்சி - திண்டுக்கல் இடையே பயணித்துக் கொண்டிருந்த நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரயிலில் கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 30 வயது சி.மணிகண்டன் என்பவர் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்து கொண்டிருந்தார்
. மணிகண்டன் பயண சீட்டு பரிசோதகர் போல வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்தார்.. மேலும் போலி அடையாள அட்டை, பெயர் மற்றும் பதவி பெயர் கொண்ட பேட்ஜும் அணிந்திருந்தார்.
. ரயில்வே ஊழியர் இல்லாத ஒருவர் பயண சீட்டு பரிசோதனை செய்கிறார் என்பதை கவனித்த அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மதுரை பயணச்சீட்டு பரிசோதகர் சரவணச்செல்வி தனது மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
இந்த தகவல் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரயிலில் மணிகண்டனை கைது செய்து, மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.
மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உரிய நீதிமன்ற நடவடிக்கைக்காக திண்டுக்கல் அரசு ரயில்வே போலீசாரிடம் மணிகண்டனை ஒப்படைத்தார்.
Tags : மதுரையில் போலி பயணச்சீட்டு பரிசோதனை கைது