வேடசந்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

by Admin / 11-08-2021 01:52:57pm
வேடசந்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வேடசந்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து கூம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலைதெருவை சேர்ந்த அப்பாஸ் மகன் ரஜாக்(11). அதேபகுதியை சேர்ந்த ராமசாமி மகன் குமார்(12). இவர்கள் 2 பேரும் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முறையே 6 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மதியம் சிறுவர்கள் குளிப்பதற்காக வேடசந்தூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள தாத்தான்குளத்திற்கு நடந்து வந்தனர்.
 
பின்னர் தங்களது ஆடைகளை கரையில் வைத்துவிட்டு அங்குள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க இறங்கினர். சேறும், சகதியுமாக இருந்ததால் சிறுவர்கள் 2 பேரும் அதில் மூழ்கினர். நீண்டநேரமாகியும் தங்கள் குழந்தைகளை காணாமல் திடுக்கிட்ட அவர்களது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பின்னர் கல்குவாரி குட்டை அருகே அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்று பார்த்தனர். குட்டையில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் அதில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி மகேஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரோஸ் தலைமையிலான வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தேடியும் உடல்கள் மீட்கப்படவில்லை. இன்று காலையில் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரஜாக் மற்றும் குமார் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டது. பின்னர் அவர்களது உடல் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via