பள்ளி கழிவறையை சுத்தப்படுத்தும் மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 210 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். 9 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் மேலூரைச் சேர்ந்த பாப்பா என்பவர் தலைமை ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாணவர்கள் சிலர் அந்தப் பள்ளியின் கழிவறையை சுத்தப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளியின் மேலாண்மை குழு தலைவராகவும்,அதே பள்ளியில் காலை சிற்றுண்டி தயார் செய்பவருமான, அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவர் தன்னோடு ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக மாணவர்களை அங்குள்ள கழிவறையை சுத்தப்படுத்த செய்து,அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில் கவிதாவின் தாயார் அம்மா பொண்ணுவும் இதே பள்ளியில் மதிய உணவு தயார் செய்யும் வேலை செய்வதாகவும்,கவிதாவை பட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தொட்டிச்சி என்பவர் தன்னையும், பள்ளி மேலாண்மை குழுவினரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தேர்ந்தெடுத்ததாகவும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தியதற்காக தன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் பள்ளி குழந்தைகளை தவறாக பயன்படுத்தி அதை வீடியோ எடுத்து இவ்வாறு செய்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் இப்பள்ளி குழந்தைகளிடம் நேரடியாக விசாரித்த போது, தாங்கள் அன்று ஒரு நாள் மட்டும் தான் கழிவறையை சுத்தம் செய்ததாகவும்,தங்களை சுத்தம் செய்ய சொல்லி அதை பள்ளியில் காலை சிற்றுண்டி தயார் செய்யும் கவிதா என்பவர் போட்டோ எடுத்ததாகவும், மாணவிகள் ஏன் போட்டோ எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சும்மாதான் என்று கவிதா கூறியதாகவும் கூறினர்.இந்த புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்...
Tags : பள்ளி கழிவறையை சுத்தப்படுத்தும் மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.