2026-ல் மீண்டும் திமுக ஆட்சி வராது. திமுக மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. ஏதோ விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளரிடம் கூறுகையில்
:நான் ஒவ்வொரு முறையும் தென்மாவட்டங்களுக்கு வரும்போது, இன்னும் இங்கே சரியான முறையில் வேலை வாய்ப்புகள் இல்லை. தொழிற்சாலைகள் போதுமானதாக இல்லை. நாங்குநேரி, கங்கைகொண்டான் என்ற இருபகுதிகள் மற்றும் தூத்துக்குடி அருகே சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றபடி கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதுபோதுமானது கிடையாது. இதன் காரணமாக தான் சாதி மோதல்கள், சண்டைகள் அதிகளவு இந்த பகுதியில் இருந்து வருகிறது. கல்வியில் முதல் 10 இடத்தை தென் மாவட்டங்கள் பிடித்துள்ளன. ஆண்டுதோறும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் போட்டி போட்டு முதலிடத்தை பிடிக்கின்றன. ஆனால், அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். அரசு போதுமான முயற்சி எடுக்கவில்லை.
தமிழக முதல்வர் 17 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, வெறும் ரூ.7,500 கோடி முதலீடு பெற்று வந்துள்ளார். அது முதலீடு கிடையாது. புரிந்துணர்வு ஒப்பந்தம். அதில் முதலீடு வரும் என்பது தெரியாது. முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதன் பின்னர் முதல்வர் ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி புரிந்துரை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த 10 லட்சம் கோடியில் முதலீடு என்ற பார்த்தால் வெறும் ரூ.87 ஆயிரம் கோடி தான். இது வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடு சேர்த்து தான். இது வெறும் 9 சதவீதம் தான். அப்படியென்றால், முதல்வர் அமெரிக்கா சென்றதில் 10 சதவீதம் தான் எதிர்பார்க்க வேண்டும். அப்படியென்றால் ரூ.750 கோடி தான். அதற்கு மேல் வராது. நிச்சயமாக இந்த பயணத்தை நான் தோல்வியாக தான் பார்க்கிறேன். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் சென்றால், ரூ.50 ஆயிரம் கோடி, ரூ.80 ஆயிரம் கோடி என வாங்கி வருகின்றனர். அப்படி முதலீடு தென்மாவட்டத்தில் அதிகமாக வர வேண்டும்.
தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி - குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரியில் உபநீர் செல்லும் நேரத்தில் அதிலிருந்து 20 டி.எம்.சி. நீரை வாய்க்கால் மூலமாக கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்கள் வழியாக விருதுநகர் வரை வர வேண்டும். அங்கு வைகை - குண்டாறில் இணைக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் திட்டத்தை அறிவித்து ரூ.14 கோடி என்ற கூறி அடிக்கல் நாட்டினர். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதே போல், தாமிரபரணி, நம்பியாறு, கோதையாறு, பச்சையாறு, எலுமிச்சையாறு திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் என பலமுறை நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்திலும், வெளியேயும் கூறியுள்ளார். ஆனால், அந்த திட்டம் முடிகின்ற மாதிரி தெரியவில்லை. தாமிரபரணி ஆற்றில் வடக்கு, தெற்கில் தலா 10 கி.மீ. வறண்ட காடு. 57 ஆண்டுகளாக நீர்மேலாண்மை என்னதான் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு வந்த வெள்ளப்பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை. ஏனென்றால், விவசாயிகளுக்கு நிவாரணம் போய் சேரவில்லை. சாலைகள் இன்னும் மோசமாக தான் இருக்கிறது. மது ஒழிப்பு என்று சொன்னாலே தமிழ்நாட்டு அரசியலில் ஒரே கட்சி பாமக தான். பாமக நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடி வருகிறார். எங்க கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது ஒழிப்புக்காக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மதுவை எதிர்த்து போராடி பாமகவில் இதுவரை 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றுள்ளனர். வேறு கட்சியில் இந்த மாதிரி கிடையாது. மது ஒழிப்பு என்றாலே நாங்கள் தான். திமுக, அதிமுக, தேமுதிக, திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மது ஒழிப்பை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் பாமக தான். கடந்த ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்து போது, நாங்கள் நிபந்தனையாக வைத்தால் 500 டாஸ்மாக் கடைகளை மூடினர். டாஸ்மாக் கடைகளை மூடினால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடும் என இப்போது அமைச்சர் கூறுகிறார். திராவிட மாடல் என்றால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது ஒரு சூழலை கொண்டு வருவது தான். 3 தலைமுறை நாசப்படுத்திவிட்டனர். அரசுக்கு வருவாய் என்று மட்டும் பார்க்காமல், உடல்நலம், வளர்ச்சி, குடும்பம், மகிழ்ச்சி, சமூக பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை என இவை அனைத்தையும் பார்த்து தமிழக முதல்வர் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரே நாளில் மூட வேண்டும் என்று அவசியம் கிடையாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை கடைகளை மூடப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதனை செயல்படுத்துங்கள். மது ஒழிப்பு மாநாடு, போராட்டம், கூட்டம் யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். இது எங்களது கட்சியின் மைய கொள்கை. ஆனால், எங்களை சாதி கட்சி என்று இழிவுபடுத்த வேண்டாம். அப்படியென்றால் நீங்கள் என்ன கட்சி. எங்கள் கட்சியை கொச்சைப்படுத்துவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தல் மட்டும் கிடையாது. அடுத்து வரும் தேர்தல்களிலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். நீதி போதனை வகுப்புகள் இப்போது இல்லை. ஒழுக்கமான பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தேவையற்ற கலாச்சாரம் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது மட்டுமல்ல அவர்களது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்பாடுவரும். 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி வராது. திமுக மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. ஏதோ விளம்பரம் செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் கோபமாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மது, கஞ்சா, போதை பொருட்கள் பாலியல் வன்கொடுமை என இவற்றில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :