குண்டுவீச்சு - 5 பேர் மீது குண்டர் சட்டம்

கோவையில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் நாசர் பாஷா (36), பைசல் ரகுமான், ஜாகிர் உசேன், இதயத்துல்லா மற்றும் முகமது ஹர்சத் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மணிகண்டனிடம் ரூ. 5,000 கடன் கேட்டு கிடைக்காததால் ஆத்திரமடைந்த நாசர் பாஷா, தனது நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச சதித்திட்டம் தீட்டியுள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி டீபாட் பேக்கரியில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாசர் பாஷா, மறுநாள் காலை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். பிப்ரவரி 13-ம் தேதி தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள பழைய டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் மற்றும் டீபாட் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களுடன் வந்தபோது நாசர் பாஷாவை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மணிகண்டன் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீச சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, நாசர் பாஷா, அவருக்கு உதவியாக இருந்த பைசல் ரகுமான், ஜாகிர் உசேன், இதயத்துல்லா மற்றும் முகமது ஹர்சத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.
Tags :