போதை மருந்து கடத்திய வாலிபர் கைது

ரயில்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மத்திய ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினருடன் இணைந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான குழுவினர், கோவை ரயில் நிலையத்தில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து கேரளா செல்லும் ரயிலில் வந்த முகமது சினான் (19) என்ற வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் கோவை ரயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் சுற்றித்திரிந்தார்.
அவரைத் தடுத்து நிறுத்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சோதனையில், முகமது சினானிடமிருந்து 150 கிராம் மெத்தாம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், முகமது சினான் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும், தனது நண்பருடன் பெங்களூரிலிருந்து கோவை வழியாக கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, முகமது சினானைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவருடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Tags :