சென்னை நேப்பியர் பாலம் அருகே 75-வது சுதந்திர தின நினைவுத் தூண்:

by Editor / 15-08-2021 05:08:43pm
சென்னை நேப்பியர் பாலம் அருகே 75-வது சுதந்திர தின நினைவுத் தூண்:




நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் சென்னை நேப்பியர் பாலம் அருகில் சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலை சந்திப்பில் தமிழக அரசால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.94 கோடி செலவில் இந்த நினைவுத் தூண் 10 நாளில் நவீன தொழில்நுட்ப முறையில் கட்டப்பட்டுள்ளது.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்று முதல் முறையாக கொடியேற்றி வைத்து விட்டு திரும்பும் வழியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வந்தார்.


பின்னர், அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வரவேற்றனர். இதையடுத்து 9.48 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 75-வது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை திறந்து வைத்தார். அவர் பொத்தானை அமுக்கியதும் நினைவுத் தூணை சுற்றி கட்டப்பட்டிருந்த திரைச் சீலைகள் அனைத்தும் விலகின.


கடற்கரை சாலையில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ள சுதந்திர தின நினைவுத் தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததும் மங்கள இசை இசைக்கப்பட்டது. அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்வின்போது முதல்-அமைச்சருடன் மூத்த அமைச்சர் துரைமுருகனும் பங்கேற்றார்.


பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் 75-வது ஆண்டு சுதந்திர தின நினைவு தூணை சுற்றி பார்த்தனர். அங்கு புகைப்பட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதை முதல்-அமைச்சருக்கு அதிகாரிகள் காண்பித்து விளக்கம் அளித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ள 75-வது சுதந்திர தின நினைவுத் தூண் பாரீசில் உள்ள ஈபிள் டவர் போன்று வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.94 கோடி இதற்காக செலவிடப்பட்டுள்ளது.


இந்த நினைவுத்தூண் தரையில் இருந்து 59 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது. பீடத்தில் இருந்து மட்டும் 42 அடி உயரத்துடன் இது அமைந்துள்ளது.நினைவுத்தூணின் உச்சியில் 4 சிங்கம் முகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது அசோக சக்கரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் நினைவுத்தூணை சுற்றி 4 புறமும் 4 வீரர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நினைவுத்தூண் பகுதியில் சிறிய பூங்கா அமைக்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் இந்த நினைவுத் தூணை பார்த்து செல்லும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via