அரசுக்கு அல்வா கொடுத்த ஆம்னி பேரூந்துக்கள்.

by Editor / 24-09-2024 12:00:06am
அரசுக்கு அல்வா கொடுத்த ஆம்னி பேரூந்துக்கள்.

மதுரையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று  23 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு பயணித்தது. இந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது.

அந்த பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட்டேக் மற்றொரு பேருந்துக்கும் பயன்படுத்தப்பட்டதை கண்டு அங்கிருந்த ஊழியருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக, பேருந்தை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஆம்னி பேருந்தில் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது பல்வேறு மோசடி சம்பவங்கள் அம்பலமாகின. பரதன் ஏர் டிராவல்ஸ் என்ற அந்த பேருந்து, புதுச்சேரி பதிவெண் கொண்டது. என்றும், மற்றொரு பேருந்தின் பாஸ்டேக்கை தவறாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதே பதிவு எண்ணில் நான்கு பேருந்துகளை மாற்றி மாற்றி ஓட்டி வந்ததும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தின் ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு, சொகுசுப் பேருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சாலை வரி கட்டாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரே பேருந்தின் ஆவணத்தை கொண்டு நான்கு பேருந்துகளை பயன்படுத்தி வந்தது உறுதியாகியுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து பல லட்சம் ரூபாய வருவாய் மோசடியை அரசு போக்குவரத்துத்துறைக்கு  ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்தை அதிகாரிகள், பறிமுதல் செய்ததால், மதுரையில் இருந்து 900 ரூபாய் கொடுத்து சென்னைக்கு பயணம் செய்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். பின்னர், பயணிகளுக்கு தலா 200 ரூபாய் மட்டும் திருப்பி வழங்கப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே பதிவெண்ணில் 4 தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக்காலம் நெருங்கிவரும் வேளையில் அனைத்து வட்டாரப்போக்குவரத்து துறை அதிகாரிகளைக்கொண்டு அதிரடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்,அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது.

 

Tags : மதுரையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து

Share via