கனிம வளங்கள் மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 25 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்கள். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அந்தத் தீர்ப்பில், ‘உரிமத்தொகை என்பது சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுப்பதால் குத்தகைதாரரால் மாநில அரசுக்கு வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான தொகையாகும். அதை வரி விதிப்பாகக் கருத முடியாது. உரிமத்தொகை, வாடகையை வரியாகக் கருத முடியாது.
உரிமத்தொகையும் வரிதான் என்று 1989-ஆம் ஆண்டு இந்தியா சிமென்ட்ஸ் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்படப்பட்டது தவறு. சுரங்கங்கள், கனிமங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு, கர்நாடகா இரும்பு மற்றும் எக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பில்,” இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 2013ன் சட்ட விதிகளின் படி முன்னதாக எட்டு நீதிபதிகளால் பெரும்பான்மையோடு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது. எனவே அதனை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags : கனிம வளங்கள் மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை