பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.
டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து, கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார். கடந்த அக். 6-ம் தேதி ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (அக். 9) அவர் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் ரத்தன் டாடா உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,“ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் ரத்தன் டாடா. இந்தியா ஒரு ஜெயிண்ட்டை இழந்துவிட்டது, ஆனால் அவரது பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.
இந்த ஆழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,“ரத்தன் டாடாவின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நெறிமுறை வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் ஒரு தரத்தை அமைத்தது.
நமது தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் டாடாவின் பங்களிப்புகள் அளவிட முடியாதவை, மேலும் அவரது பாரம்பரியம் கோடிக் கணக்கானவர்களை ஊக்குவிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாக்கம் என்றென்றும் நினைவுகூரப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tags : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.