பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை என ஐந்து சுரங்கப் பாதைகளும் தற்காலிகமாக மழைநீர் தேங்கி நிற்பதால் மூடப்பட்டுள்ளது.

by Staff / 15-10-2024 04:40:21pm
பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை என ஐந்து சுரங்கப் பாதைகளும் தற்காலிகமாக மழைநீர் தேங்கி நிற்பதால் மூடப்பட்டுள்ளது.

சென்னை:வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டன. பலத்த காற்றும் வீசியது.இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது.அதிகாலை 3 மணியில் இருந்தே விட்டு விட்டு பெய்த மழை காலை 9 மணிக்கு பின்னர் வெளுத்து வாங்கியது. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்ததால் இருள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையும் கொட்டியது.இந்த மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையாக பெய்தது. விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்த மழை சுமார் 1½ மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை மீண்டும் பெய்தது. பகலில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.மெட்ரோ ரெயில்கள் பணிகள் நடைபெற்று வரும் இடங்களிலும் மழைநீர் வடிகால் வழியாக தண்ணீர் செல்ல முடியாத இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது.கோயம்பேடு மெட்ரோ பாலத்துக்கு கீழே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வழியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.புரசைவாக்கம் ரித்தட்கன் ரோட்டில் வழக்கம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அதன்படி இன்றும் மழைநீர் தேங்கி இருந்தது.அயனாவரம் நூர் ஓட்டல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி அருகே தண்ணீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது.புரசைவாக்கம் பழைய மோட்சம் தியேட்டர் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன.அழகப்பா சாலையில் தாஷப்பிரகாஷ் பஸ் நிறுத்தம் அருகே சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. கழிவுநீரும் சேர்ந்து உள்ளதால் கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் இறங்கி செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.அண்ணாநகர் அண்ணா ஆர்ச் அருகே அரசு சித்த மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி இருந்த மழைநீரை கடந்து செல்வதற்கு நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிண்டி, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் மழை நீரால் சூழ்ந்திருந்தன. தி.நகரில் உள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் நலச்சங்க கட்டிட பகுதியிலும், தி.நகர் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு, மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீரில் சிக்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.ராயபுரம், ஆட்டுத்தொட்டி, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை ஸ்டான்லி நகர், வண்ணாரப்பேட்டை போஜராஜன் தெரு, கேணியம்மன் நகர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், வடபெரும்பாக்கம் போன்ற இடங்களிலும் சாலையில் தேங்கிய மழை நீரில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்றதை காண முடிந்தது.இன்று காலையில் இருந்தே மிரட்ட தொடங்கிய கனமழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. குறிப்பாக காலை 9 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்கியது. பகலில் சூரியன் தலைகாட்டாத நிலையில் இருள் சூழ்ந்தபடியே காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்ட படியே சென்றனர்.தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தாழ்வான இடங்கள் பலவற்றில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. காலையில் இருந்தே பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகள் இன்று வெள்ளக்காடாகவே காட்சி அளித்தன. இதனால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.இப்படி தேங்கிய மழை வெள்ளத்தால் இன்று காலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சென்னை மாநகரில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன.இப்படி சாலைகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலமாக வெளியேற்றிக் கொண்டே இருந்தனர்.ஆனால் மழை பெய்து கொண்டே இருந்ததால் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மயிலாப்பூர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகள், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் அண்ணாநகர், முகப்பேர், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இப்படி இன்று பகலில் வெளுத்து வாங்கிய மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர். 300-க்கும் மேற்பட்ட சாலைகளில் குளம் போல மழைநீர் தேங்கியது.வில்லிவாக்கம், அம்பத்தூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. ஓட்டேரி, அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை, பச்சைக்கல் வீராசாமி தெரு, ஐ.சி.எப்., சென்னை பாட்டை சாலை, வில்லிவாக்கம், சிட்கோநகர், நாதமுனி, திருமங்கலம் சாலை, சி.டி.எச். சாலையில், சென்னை கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. 

 

Tags :

Share via