அர்ச்சகர்கள் பணி நீக்கம் இல்லை : மிரட்டலுக்கு அரசு பணியாது:  அமைச்சர் சேகர்பாபு உறுதி

by Editor / 17-08-2021 05:27:57pm
அர்ச்சகர்கள் பணி நீக்கம் இல்லை : மிரட்டலுக்கு அரசு பணியாது:  அமைச்சர் சேகர்பாபு உறுதி



மிரட்டலுக்கு பணியும் அரசல்ல திமுக அரசு என்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு  உறுதிபட தெரிவித்துள்ளார்.


ஆகஸ்ட் 14 ந்தேதி, திமுக அரசு பொறுப்பேற்ற 100வது நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதியினர் 58 பேருக்கு, அர்ச்சகராக பணி நியமனம் செய்து வைத்தார். இதுதொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முறையாக பயிற்சி பெற்றவர்கள் 58 பேர் கோயில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோயில்களில் அர்ச்சகராக உள்ள யாரையும் வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை. எந்த கோயிலிலும் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை.


மேலும் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களில், வயது மூப்பிற்கு பிறகும் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களும் வெளியேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 58 பேர் நியமனம் காரணமாக யாரும் பணியை இழந்திருந்தால், எங்களிடம் தெரிவித்தால் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப்பணி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


புதிய அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரமணிய சாமி கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, கடந்த 10 ஆண்டுகளாக அர்ச்சகர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய பணி நியமனம் செய்யப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு சட்டப்படி பரம்பரை அர்ச்சகரை மாற்றலாம் என உள்ளது. சில ஊடகங்கள் இது தொடர்பாக பொய் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் திமுக அரசு எந்த மிரட்டலுக்கும் அஞ்சி பணியும் அரசல்ல. விதி மீறலை சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்வோம் என்றும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via