திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார் 2500 போலீசார் பாதுகாப்பு

by Editor / 29-11-2024 02:06:32pm
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார் 2500 போலீசார் பாதுகாப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை (30.11.24) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் நீலகிரியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதியம் ஒரு மணிக்கு வருகை தர உள்ளார். அவருக்கு தமிழக அரசின் சார்பிலும், மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதற்காக மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று ஹெலிகாப்டர் இறங்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணிக்கு திருவாரூர் வருகை தரும் குடியரசுத் தலைவர், மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு அங்குள்ள விழா அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

திருவாரூர் பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஏடிஜிபி சஞ்சய் குமார் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணிகளை திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன், தஞ்சை மண்டல டிஐஜி மற்றும் திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் 15 மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள், 40 துணை கண்காணிப்பாளர்கள், 65 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எட்டு மாவட்டங்களை சேர்ந்த 2400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருவாரூரில் நவம்பர் 30 ஆம் தேதி முழுவதும் ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். மாலை பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் குடியரசுத் தலைவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

Tags : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார் 2500 போலீசார் பாதுகாப்பு

Share via