காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கைது: 110 பேர் சிக்கினர்

by Editor / 17-08-2021 07:04:34pm
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கைது: 110 பேர் சிக்கினர்

 தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதும் கட்டப் பஞ்சாயத்து, கூலிப்படை ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் டிஐஜி சத்யப்பிரியா மேற்பார்வையில், எஸ்பி டாக்டர் சுதாகர் ரவுடிகள் விஷயத்தில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஹிஸ்டரி ஷீட் ரவுடிகளை பட்டியலிட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . அவரது தாய், தந்தையருக்கு சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு விவரத்தினை பார்ப்பதற்காக பட்டா விண்ணப்பித்து வாங்கியுள்ளார். சுங்குவார் சத்திர காவல் நிலைய பிரபல சரித்திர பதிவேடு ரவுடி மதுரமங்கலத்தைச் சேர்ந்த குணா என்ற படப்பை குணா என்பவரிடம் பிரபாவதியின் தந்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனால் குணா தற்போது அந்த நிலத்தின் ஆவணத்தை கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் பிரபாவதி நிலத்தின் பட்டாவை பெற்றுச் சென்றதால் குணா தனது அடியாட்களை விட்டு பிரபாவதியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பிரபாவதி சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ரவுடி குணா (எ) படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து குணா தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வந்த நிலையில் சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர். குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட மொத்தம் 24 வழக்குகள் உள்ளது. மேலும் படப்பை குணா தான் திருந்தி வாழ விரும்புவதாக கடந்த ஆண்டு காவல்துறையில் மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டில் இதுவரை 110 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 35 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via