தண்ணீர் இன்றி தவித்த மக்களின் தாகத்தை தணித்த வைகை நீர்

by Editor / 05-12-2024 09:53:19pm
தண்ணீர் இன்றி தவித்த மக்களின் தாகத்தை தணித்த வைகை நீர்

விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த கட்டனூர், ஆலங்குடி, நாலூர், இருஞ்சிறை, மானூர், மறையூர், வி.கரிசல்குளம், கருவக்குடி, பூம்படாகை, ஆலத்தூர், ரெட்டைக்குளம், தாமரைக்குளம், அத்திகுளம் , உலக்குடி, ஆதித்தனேந்தல், நரிக்குடி, வீரசோழன், நல்லிக்குறிச்சி, சுள்ளங்குடி, உளுத்திமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்தனர். இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து டிசம்பர் 1ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் மொத்தம் 450 மில்லியன் கன அடி நீர் திறந்து விடுவதற்கு அனுமதியளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அத்திகுளம் அணைக்கட்டில் கிருதுமால் நீர் வந்தடைந்ததை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டார். வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வந்தடைந்ததை கண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 

 

Tags : தண்ணீர் இன்றி தவித்த மக்களின் தாகத்தை தணித்த வைகை நீர்

Share via