முதலமைச்சர் டாஸ்மாக் பிரச்னைக்காக பதவி விலக வேண்டும்-அண்ணாமலை

by Editor / 10-12-2024 08:55:38am
முதலமைச்சர் டாஸ்மாக் பிரச்னைக்காக பதவி விலக வேண்டும்-அண்ணாமலை

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு தமிழக அரசு அமுல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள். அப்படி கிடைக்க விட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்.

ஆதி திராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா? டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12-ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடியுள்ளார். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக அவர் பதவி விலக வேண்டும்.

விருதுநகரில் எஸ்ஐ மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தமிழகம் முழுவதும் போலீசார் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளததை எடுத்துக்காட்டுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம் பல்வேறு பழிவாங்கும் படுகொலை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.

எனவே, இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. கடந்த மூன்று மாத காலமாக பாஜக நிர்வாகிகள் தொண்டார்கள் தீவிர பணியாற்றியுள்ளனர். இதனால் பாஜக எழுச்சி கண்டுள்ளது என்றார்.

 

Tags : முதலமைச்சர் டாஸ்மாக் பிரச்னைக்காக பதவி விலக வேண்டும்-அண்ணாமலை

Share via