பொன்முடி விவகாரத்தில் சிபிஎம் கட்சியைத் தவிர எந்த கட்சிக்கும் மான ரோஷம் இல்லை எச்.ராஜா

திருவாரூரில் பாஜக நிர்வாகியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது திமுக அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் பெண்களை இழிவு படுத்தி பேசிய நிலையில், அவரைக் கட்சிப் பதவியில் இருந்து விலக்கியிருப்பது போதாது. அனைத்து மக்களையும் சமமாக பாவிப்பேன் என பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர் என்ற முறையில் பெண்களை மட்டுமின்றி, சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்றுகின்ற அனைவரது மனத்தையும் புண்படுத்திய பொன்முடியை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
"ஏரோட்டும் உழவன் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் உனக்கு எதற்கு தியாகேசா " என்று பாடியவர்கள் திமுகவினர். சாமி சிதம்பரனார் என்பவர் பெரியார் குறித்து எழுதிய புத்தகத்தில் 34 ஆவது பக்கத்தில், "விலை மாதர்கள் வீடு புகுந்து வருவார் ஈவேரா " என குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்துக்கு ஈவேராவிடம் ஒப்புதலும் பெற்றுள்ளார். எனவே திமுகவின் டிஎன்ஏவில் இந்து விரோதம் மற்றும் கீழ்த்தரமான எண்ணங்கள் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். இந்த தீய சக்தியை வருகின்ற 2026 ம் ஆண்டு தேர்தலில் ஒழிக்க வேண்டும்.
பார்வதி, முருகனுக்கு வேல் கொடுத்த தினமான பங்குனி உத்திரத்தன்று பாஜக, அதிமுக கூட்டணி உருவாகி இருக்கிறது அத்தகைய தேசிய ஜனநாயக கூட்டணி வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றும்.
கடந்த 1998ம் ஆண்டு அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்த நிலையில் 39 க்கு 30 தொகுதிகளை கைப்பற்றியது. 1999 ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து 26 தொகுதிகளை கைப்பற்றியது. அந்த அளவுக்கு தேசிய தலைமையை பாராட்டுகின்ற வகையில் தமிழக மக்களின் மன உணர்வு உள்ளது.
தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திமுக அரசு "ஊழல், ஊரல், போதை என்ற நிலைக்கு தமிழகத்தை தள்ளிவிட்டது ஒரு காலத்தில் பஞ்சாப் தான் இத்தகைய போதை மாநிலமாக திகழ்ந்த நிலையில், தமிழகம் தற்போது முன்னிலையில் உள்ளது. பள்ளிக்கு சென்று வரும் நமது வீட்டுப் பிள்ளைகளின் புத்தகப் பைகளில் பொட்டலங்கள் ஏதேனும் இருந்து விடுமோ என்கின்ற அச்சத்தோடு தேட வேண்டிய நிலைக்கு திமுக அரசு தள்ளிவிட்டுள்ளது எனவே நமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டுமென நினைப்பவர்கள், திமுகவுக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
பாஜக அதிமுக மீது ஏறி சவாரி செய்கிறது என திருமாவளவன் கூறியதற்கு... திருமாவளவன் யார் மீது ஏறி சவாரி செய்கிறார். திமுக கூட்டணியில் இருக்கின்ற திருமாவளவனும் இரண்டு சாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு அந்த சாதியில் உள்ள பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என கூறியது குறித்த கேள்விக்கு... இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையாக இருப்பவர் ராமர் என்பதாலேயே ராமேஸ்வரத்துக்கு வந்த பிரதமர் மோடி ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டு மக்களையும் முழக்கம் இட வைத்தார்.
பொன்முடி பேச்சுக்கு திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியைத் தவிர மற்ற கூட்டணி கட்சியினருக்கு மான ரோஷம் கிடையாது.
அதிமுக உள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்பதை அமித்ஷா "எங்கள் கட்சி விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம், அதிமுக அவர்கள் கட்சி விவகாரத்தை பார்த்துக் கொள்வார்கள்" என தெரிவித்துவிட்டார் என்றார்.
Tags : பொன்முடி விவகாரத்தில் சிபிஎம் கட்சியைத் தவிர எந்த கட்சிக்கும் மான ரோஷம் இல்லை எச்.ராஜா