வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்வது தவறு: கே.சி.வீரமணி
வருமானத்துக்கு அதிகமாக 76 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது தவறானது என்றும், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி. அவர் மீது அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்ததுள்ள புகாரில், கே.சி வீரமணி, 2011 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 7 கோடியே 48 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்ததாகவும், ஆனால் 2011 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலத்தில், அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருப்பத்தூர், பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் அசையா சொத்துகளும் வாங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வீரமணியின் மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, அது கே.சி.வீரமணியின் ஆர்.எஸ்.கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றப்பட்டள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கத்தின் புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கே.சி. வீரமணி, சிலரின் தூண்டுதலின் பேரில் காழ்புணர்ச்சி காரணமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். சிறு வயது முதலே வணிகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், முறையாக வருமான வரி தாக்கல் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது பிரமாண பத்திரத்தில் கூட முறையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Tags :