மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்:

by Editor / 19-08-2021 02:30:34pm
மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்:

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சென்னை உர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்காக தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கப்படவில்லை. இப்பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம் மற்றும் சி.ஆர்.பி.எப் பொது இயக்குனருக்கு அக்டோபர் 9-இல் கடிதம் அனுப்பினேன். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நவம்பர் 9-ல் இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனால் அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. இந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும். தமிழக மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் அனைத்து கடிதங்களுக்கும் இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கும், 1963ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும்.

இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும். எனவே, தமிழக அரசுக்கும், தமிழக மக்களவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. தீர்ப்பில், தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வி தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்கு பொருளாதார அடிப்படையிலேயே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இருப்பினும் எத்தகைய செய்தி ஆயினும், விளக்கம் ஆயினும் அதனை தாய்மொழியில் புரிந்து கொள்ளும்போதே முழுமையடைகிறது. இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல மொழிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதை மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.. விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via