மக்களின் வரிப்பணம் 8 லட்சம் வீணடிப்பு... சிமெண்ட் கழிவுநீர் கால்வாய் ஒரே வருடத்தில் குப்பைக்குச் சென்ற அவலம்...

by Admin / 19-08-2021 02:56:06pm
மக்களின் வரிப்பணம் 8 லட்சம் வீணடிப்பு... சிமெண்ட் கழிவுநீர் கால்வாய் ஒரே வருடத்தில் குப்பைக்குச் சென்ற அவலம்...

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி யில் சிமெண்ட் சாலை கழிவுநீர் கால்வாய்    போடப்பட்ட ஒரு வருடத்தில் தோண்டப்பட்டு குப்பைக்கு சென்ற அவலம் குறித்து பொதுமக்கள் புகார்.
 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு கிராமப்புறங்களில் பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலை வழங்க வேண்டும். இதை நம் தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டம் என்றும் குறிப்பிடுவர்கள்.

இந்தத் திட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் 9வது வார்டில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி 2020ஆம் ஆண்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டத்தில் முறையாக அப்பகுதி கிராம மக்களுக்கு வேலை வழங்காமல் கான்ட்ராக்டர் மூலம் பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் கல்வெட்டிலோ 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 224 ரூபாய் கூலியில் 327 வேலையாட்கள் மூலம் பணிகள் முடிக்கப்பட்ட தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள் முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்குள் தரமற்ற முறையில் போடப்பட்ட அந்த சிமெண்ட் சாலை  தற்போது முற்றிலும் அகற்றப்பட்டு அருகாமையில் உள்ள குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது அதிகாரிகளின் அலட்சிய பேச்சால் அப்பகுதி மக்கள் சாலை மற்றும் சாக்கடை வசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முத்துராமலிங்கம் ஒன்றிய உதவி பொறியாளர் கார்த்திக்  இருவரிடமும்  அதிகாரி ஒருவர் சாலையை காலதாமதமும் இன்றி சரிசெய்து கொடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதனை கண்டும் காணாமலும் இருவரும் இருந்து வருகின்றனர் இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது,

100 குடும்பங்கள் வசித்து வரும் எங்கள் பகுதியில் ஏழு குடும்பங்களுக்கு  சாக்கடை வசதி இல்லை திறந்த வெளியில்தான் சாக்கடை இருக்கிறது. சிமெண்ட் சாலை அமைத்து ஒரு வருடம் ஆகிறது ஆறு மாதத்திற்கு முன்பாகவே முற்றிலும் தோண்டப்பட்டு இதுவரை சரி செய்யப்படவில்லை.

நாங்கள் வீடு கட்டுகிறோம் பஞ்சாயத்து போர்டில் இருந்து வீடு கட்டுவதற்கான அனுமதி வாங்குங்கள் என்று அழுத்தம் கொடுத்து நாங்கள் அனுமதியும் பெற்று உள்ளோம் ஆனால் ஒரு செங்கல் கொண்டுவருவதற்கு கூட பாதை இல்லை தனியார் தோட்டத்தின் வழியாக 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து பொருட்களைக் கொண்டு வந்துள்ளோம்.
 
முன்னாள் போட்ட சிமெண்ட் சாலை எம்சாண்ட் மணலில் குறைந்த அளவிலான சிமெண்ட் பயன்படுத்தி கனம் குறைவாக தரமற்ற  சாலை அமைத்துள்ளார்கள். இந்த சாலை பத்து நபர்களை கொண்டு மூன்று நாட்களில் வேலையை முடித்துள்ளார்கள்.

இந்தப் பகுதி கிழக்குப் பகுதி களத்து தெரு 8 அடி சாலை 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். முற்றிலும் சாக்கடை வசதி இல்லை தெருவின் தொடக்கத்திலும் காலி இடங்களிலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. அதனால் பல பிரச்சனை எழுகிறது. காலி இடங்களில் தேங்கி இருக்கும் சாக்கடைகளில் சிறுவர்கள்  விழுந்து விடுகிறார்கள். வீடு கட்டினால் வரி பணத்தை மட்டும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் ஆனால் எந்த வசதியும் இல்லை. இந்த சிமெண்ட் சாலை போட்டு ஒரு வருடம் தான் ஆகிறது தற்போது குழாய் பதிப்பதாக கூறி சாலையைத் தோண்டி சென்றுவிட்டார்கள். இதுவரை சரி செய்து தரவில்லை.
இவர்கள் செய்த வேலைக்கு எங்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த கொடுவிலார்பட்டி ஊராட்சியில் அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் அப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை வழங்காமல் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு தரமற்ற சிமெண்ட் சாலை அமைத்து  ஒரு வருடத்திற்குள் இந்த சாலை முற்றிலும் அகற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டு அரசுக்கு எட்டு லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் பொதுமக்களின் வேதனையை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Tags :

Share via