ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா... சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பறிமுதல்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூலம் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாகப்பட்டிணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஹவுரா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நடைமேடை எண் 9-க்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு இறங்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நடந்து வந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் ரமேஷ்குமார், அருள்குமரன் ஆகிய இருவரும் அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3 பொட்டலங்களில் 5 கிலோ எடையிலான கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் சென்னை தாம்பரம் சானிடோரியத்தைச் சேர்ந்த அஜித் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கி, எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து தொடர்ந்து பிடிபட்ட அஜித் என்ற நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :